ஆணுறை பாக்கெட்டுகளில் கட்சிகளின் சின்னம் - பேசுபொருளான ஆந்திர அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்!
ஆந்திராவில் ஆணுறை பாக்கெட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அங்கு தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன. விதவிதமான யுக்திகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளும், கட்சியினரும் ஈடுபடுவது வழக்கம். சாலையோர உணவகங்களில் தோசை சுட்டுக் கொடுப்பது, டீக்கடைகளில் டீ போட்டுக் கொடுப்பது என மக்களின் கவனம் ஈர்க்கும் பிரச்சாரங்களில் கட்சியினர் ஈடுபடுவதை முந்தைய தேர்தல் களத்தில் கண்டிருப்போம்.
அந்த வகையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் கையாண்டுள்ள பிரச்சார யுக்தி பேசுபொருளாகியுள்ளது. கட்சிகளின் சின்னம் இடம்பெற்றுள்ள ஆணுறை பாக்கெட்டுகளை மக்களுக்கு வழங்கி அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்களுடன் ஆணுறை பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியதுடன், பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல... தானா சேர்ந்த படை...” - கோவையில் அண்ணாமலை பேச்சு
இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கட்சி பிரச்சாரத்திற்காக மக்களுக்கு ஆணுறை தருகிறார்கள். இது என்ன வகையான விளம்பர யுக்தி? அடுத்தது என்ன? வயாகரா தரப் போகிறார்களா? இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று தெலுங்கு தேசம் கட்சியை சாடி பதிவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சின்னத்துடன் கூடிய ஆணுறை பாக்கெட்டின் புகைப்படங்களை தெலுங்கு தேசம் கட்சியும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இதுதான் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலுக்குக் கையில் எடுத்துள்ள புதுவகை பிரச்சார யுக்தியா? என்று சாடியுள்ளது.