வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய பள்ளி நிர்வாகம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நாடு முழுவதும் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், பள்ளி வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் தேர்வுகளை முடித்து விடுமுறையை அறிவித்துவிட்டன. ஆனால், இறுதித் தேர்வுகளை முடிக்காத சில பள்ளிகள் இன்னும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வெப்பத்தைத் தணிக்க கன்னோஜ் மாவட்டம் மக்சவுனாபூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்த வகுப்பறையை அப்பள்ளி நிர்வாகம் நீச்சல் குளமாக மாற்றியுள்ளது. வெப்பத்தைத் தணிப்பதற்காக இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் பள்ளிக் குழந்தைகள் இறங்கி விளையாடி வருகின்றனர். இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் வைபவ் ராஜ்புத் கூறியதாவது, “இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. குழந்தைகளை வெப்ப அலையில் இருந்து காக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். வெயில் அதிகமாக இருந்ததால் பள்ளிக்கு வர மறுத்த குழந்தைகள் தற்போது நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர்" இவ்வாறு தெரிவித்தார்.