'ஆவேசம்' பட பாணியில் ஓடும் காரில் நீச்சல்குளம்...யூடியூபர் மீது நடவடிக்கை எடுத்த கேரள அரசு!
கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சஞ்சு டெக்கி என்பவர் ஓடும் காரில் நீச்சல்குளம் உருவாக்கிய நிலையில், கொட்டமடித்ததற்காக அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளார்.
கேரளாவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் சஞ்சு டெக்கி. தனது வீடியோக்கள் அதிக பார்வைகளை பெற வேண்டும், அதன் மூலம் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்பும் யூடியூபர்களில் சஞ்சுவும் ஒருவர். அதன்படி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் அண்மையில் வெளியான 'ஆவேசம்' திரைப்படத்தில் இடம்பெற்றது போல், தனது காரினுள் நீச்சல்குளத்தை உருவாக்க சஞ்சு முடிவு செய்தார்.
அதற்காக அவர் தனது காரின் தார்பாயை பயன்படுத்தி தற்காலிகமாக நீச்சல்குளம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் நெடுஞ்சாலையில் கார் செல்ல, அவர் தனது நண்பர்களுடன் இணைந்து நீச்சல்குளத்தில் நீந்தியபடியும், இளநீர் அருந்தியவாரும் வீடியோவை எடுத்துள்ளார். அவ்வாறு செல்லும் போது நீச்சல்குளத்திலிருந்த தண்ணீர் என்ஜினுக்குள் புகுந்தது. உடனே அவர்கள் நடுவழியில் காரை நிறுத்தி தண்ணீரை வெளியேற்றினர்.
இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவுக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்ததில், மோட்டார் வாகனத் துறை யூடியூபர் சஞ்சுவுக்கு சம்மன் அனுப்பியது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.