வெஜ் பிரியாணிக்கு பதில் நான்வெஜை டெலிவிரி செய்த ஸ்விக்கி... கதறி அழுத பெண்... ஹோட்டல் உரிமையாளர் கைது!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த சாயா சர்மா என்ற பெண், ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனமான ஸ்விக்கியில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் நிறுவனமும் அவருக்கு உணவை டெலிவிரி செய்துள்ளது. பிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்த பெண் சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
காரணம், சாப்பிட்டதில் தனக்கு டெலிவிரி செய்யப்பட்ட உணது அசைவம் என்பதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் சாயா சர்மா பதிவிட்டுள்ளார். அதில்,
“நான் ஒரு சுத்தமாக சைவப் பெண். நவராத்திரியின் போது இந்த அசைவ பிரியாணியை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதைச் செய்தவர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்திருக்கிறார். நான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தபோது அவர்களால் எப்படி அசைவத்தை அனுப்ப முடியும்” என அழுதுகொண்டே வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அசைவ உணவை வழங்கிய ஹோட்டல் உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவரை போலீசார் கைது செய்தனர்.