உங்களுக்கு அதிகமாக வியர்க்குதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
கோடையில் வியர்வையில் இருந்து எவ்வாறு தப்பலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை, நீரிழப்பு, வேர்க்குரு, அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும். கோடை காலத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலம் வந்துவிட்டாலே வியர்வையிலிருந்து தப்பவே முடியாது. இருப்பினும் நம் வாழ்க்கை முறையைப் பொருத்து அதன் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் வியர்வையில் இருந்து எவ்வாறு தப்பலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
- கோடை காலத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் வியர்வையிலிருந்துத் தப்பலாம். அதன்படி,கோடை காலத்தில் அதிக காரமான, வறுத்த, பொறித்த உணவுகளை முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதிக நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
- உடற்பயிற்சி செய்யும் போது ஹார்மோன்கள் சீராகி உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது. இதனால் வியர்வை வடிவது குறையும். இதனால், தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். இதனால் கழிவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், வியர்வையும் குறையும்.
- கோடையில் காற்றோட்டமான, லேசான பருத்தி ஆடையை அணியலாம். இதன்மூலம் சருமம் காற்றை நன்கு உள்ளிழுத்து வியர்வையைக் குறைக்கும்.
- அதிகமாக வியர்வையை வெளிப்படுத்தக் கூடிய அக்குள்களில் அதற்குரிய கிரீம்களைப் பயன்படுத்தலாம். இதனால் வியர்வை கட்டுப்படுத்தபடுவதுடன், துர்நாற்றமும் வராது.