ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் - பிபவ் குமார் கைது!
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.
அதில், “கடந்த 13-ம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார். என்னை தரையில் இழுத்து தள்ளினார். இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின. எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் – 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!
இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, தற்போது பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை செய்து வருகின்றனர்,