இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தொடர் போராட்டங்களால் பிரிஜ் பூஷன் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பராவார். இதனால் அவரது வெற்றிக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து தங்களது பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் ஆகியோர் அறிவித்தனர்.
சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்றைய தினமே(டிச.21), தேசிய அளவிலான U-15 மற்றும் U-20 மல்யுத்த போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்திரபிரதேசத்தில் நடத்தப்படும் என அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பானது தேசிய போட்டிகளில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய அறிவிப்பை வழங்காமலும், மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளைப் பின்பற்றாமல் எடுக்கப்பட்டதாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.