"எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலனுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் குப்பை எரிஉலை திட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை என்றும், அவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலையும், இயற்கைவளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை இல்லாத இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதனடிப்படையில் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், குப்பை எரி உலை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் கழிவுகளை வளமாக மாற்றுவதாலும், நீர், நிலம், காற்று ஆகியவற்றின் மாசுபாட்டை தடுப்பதாலும் இவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
நிலக்கரி அனல் மின்நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகும். குப்பை எரி உலைகளில் இருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். இதனால் குப்பை எரி உலைகள் செயல்படும் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நச்சு சாம்பல் கலக்கும். அப்பகுதிகளில் உள்ள உணவகங்களில் தயாராகும் உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். குப்பை எரி உலைகளால் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் இருக்கும் நிலையில் அவற்றை வளப்படுத்தும் அமைப்புகள் என்றும், அவற்றால் நீர், நிலம், காற்று ஆகியவை பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுவது கொடூரமான அமைச்சகம் ஆகும்.
சென்னையில் கொடுங்கையூர் பகுதியில் ஆண்டுக்கு 7லட்சத்து 66ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மின் உலையை ரூ.1,248 கோடி செலவிலும், அதற்கு இணையான குப்பை எரி உலையை பெருங்குடியிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அந்த பேரழிவுத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தி வருகிறது. மத்திய அரசின் புதிய விதியை பயன்படுத்தி இந்த இரு எரிஉலை திட்டங்களையும் திமுக அரசு உடனடியாக செயல்படுத்தும் ஆபத்து உள்ளது.
குப்பை எரி உலைகளை அமைப்பதை விட, குப்பையில்லா நகரங்களை அமைப்பது தான் சிறந்தது ஆகும். எனவே, நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.