உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி துணைநிலை ஆளுநர், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சுமார் 15 மாதங்கள் அதாவது 2027 பிப்ரவரி 9-ம் தேதி வரை பதவியில் இருப்பார்.
முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பது குறித்து பேசிய சூர்யகாந்த், "எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.