ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா!
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருபட்டினத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு எனும் பறவை பூஜித்த தலமாக திகழும் இந்த தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர என பெயர்பெற்று விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் காலையில் சூரிய உதய நேரத்தில் சூரியனின் ஒளி இறைவன் மீது நேரடியாக விழும்.
அப்பொழுது ஸ்ரீ சூரிய பகவான் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமியை வழிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சூரிய பூஜை விழா ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சூரிய பூஜை விழா இன்று துவங்கியது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி மீது விழுந்த போது சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த காட்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சூரிய பகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது.