#Suriya45 | 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா – த்ரிஷா!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 45' திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா? இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா? என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இதனை சமீபத்தில் உறுதிசெய்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா மற்றும் த்ரிஷா ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’ திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் நடித்த இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.