#Suriya45 | No சொன்ன விஜய்... ஆர்.ஜே.பாலாஜி கதையில் சூர்யா வந்தது எப்படி?
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாகவும், இந்த படத்தின் கதை விஜய்க்கு எழுதப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார்.
ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடித்து கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக அமைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், விஜய்க்காக எழுதிய கதையில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியான ‘கோட்’ திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்திரைப்படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இது விஜய்யின் 69-வது படமாகும். இத்துடன் திரைத்துறையில் இருந்து விடைபெறுவதாக விஜய் அறிவித்தார். இந்தப் படத்தில் ஹெச்.வினோத் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு பல்வேறு இயக்குநர்கள் விஜய்யை சந்தித்து கதை கூறி வந்ததாகவும், அதில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர் எனவும், இதனை ஆர்.ஜே.பாலாஜியே மறைமுகமாக உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆர்.ஜே.பாலாஜியின் கதை நன்றாக இருந்தாலும், கடைசி படமாக இந்த படம் வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாகவும், பின்பு அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து ‘மாசாணி அம்மன்’ என்ற பெயரில் த்ரிஷாவை வைத்து இயக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்க்காக எழுதிய கதையினை சூர்யாவை சந்தித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியதாகவும், அந்தக் கதையினைக் கேட்டு சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொல்லி சூர்யா ஓகே செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் மகிழ்ச்சியான ஆர்.ஜே.பாலாஜி, தற்போது சூர்யா சொன்ன மாற்றங்களை எழுதி வருவதாகவும், விரைவில் இறுதிக்கட்ட கதை விவாதம் நடைபெறவுள்ளதாகவும் தெரிகிறது. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, உடனடியாக ஆர்.ஜே.பாலாஜி படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் சூர்யா என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.