‘ரெட்ரோ’ போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘ரெட்ரோ’ படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைட்டில், டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் வரும் கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினமான இன்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு நடிகர் சூர்யா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.