“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஒரு வழக்கின் தீர்ப்பின்படி, பட்டியலின எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பட்டிலின இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.
இதையும் படியுங்கள் : “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பஞ்சாபின் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் வழங்கிய பட்டியலின இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற தீர்ப்பு ரத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
"ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் திமுக பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் கருணாநிதி கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.