உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : பரபரப்பான அரசியல் களம்...விரைவில் ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம்?!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது.
அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கடும் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்தது யாரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்வது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகமும் ஆலோசித்து வருவதாகவும், அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.