Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்" - அன்புமணி ராமதாஸ்!

பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
04:28 PM Aug 13, 2025 IST | Web Editor
பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இயற்கை நமக்கு கொடுத்தக் கொடையைக் காக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை பல மாதங்களாக செயல்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டிருப்பதை மன்னிக்கவே முடியாது.

Advertisement

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பொருள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், நேரடியாக பாலாற்றில் கலக்கவிடப்படுவதால் ஆறு கடுமையாக மாசுபடுகிறது. இதைத் தடுப்பதற்காக வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள், அதற்காக தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் உங்களின் மாவட்டங்களில் எத்தனை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினா எழுப்பினார்கள். அதற்கு விடையளித்த மாவட்ட ஆட்சியர்கள், வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், சற்று கற்பனை செய்து பாருங்கள்... ஆயிரமாயிரம் லிட்டர்கள் கழிவுநீர் தினமும் பாலாற்றில் கலக்கவிடப்படுகிறது. அப்படியானால் ஆற்றின் நிலை எப்படியாக இருக்கும்? நமது நாட்டில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை; அதனால் பலரும் இன்னும் ஆறுகளுக்குச் சென்று தண்ணீர் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றனர். எங்களை நம்புங்கள். இயற்கை நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாற்றைக் காக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டும் போது, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட தமிழக அரசு காட்டாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

பாலாற்றை காக்கும் நோக்குடன் தொடரப்பட்ட வழக்கில் 2001-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பாலாறு கழிவுகளால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரம் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதை எதிர்த்து 2011-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 30-ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; வேலூர் மாவட்டத்தில் தூய்மையான, ஆரோக்கியமான சூழலை அடையாளம் கண்டு, உருவாக்கிப் பராமரிப்பது குறித்து தணிக்கை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் சத்தியநாராயணா தலைமையில் குழு அமைக்கப் பட்டதைத் தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. பாலாறு என்பது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுக்குக் கிடைத்த வரம். அதைப் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. ஆனால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை அளித்தும் கூட அவற்றை செயல்படுத்துவதற்கு பதிலாக, பாலாற்றை சீரழிக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாலாற்றை சீரழிக்கும் நிறுவனங்களிடமிருந்து தான், சீரழிவுகளை சரி செய்வதற்கான செலவுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட, அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில்லை. இதன் மூலம் தமிழக ஆட்சியாளர்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? என்பதை எளிதாக அடையாள காண முடியும். இந்த நிலைமை மாறாத வரை பாலாற்றை பாதுகாக்க முடியாது.

பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து திருந்த வேண்டும். பாலாறு வழக்கில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறியவர்களையும், இந்தத் தீர்ப்பை மீறுபவர்களையும் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கூட அடைக்க மாட்டோம்; டெல்லியில் உள்ள திகார் சிறையில் தான் கொண்டு வந்து அடைப்போம் என்று எச்சரித்திருந்தனர். தமிழக அரசுக்கு எதிராக அத்தகைய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுக்கும் நிலையை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. பாலாற்றை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :
Anbumani RamadossCMDMKlakeMKStalinPMKSupreme courtTamilNadu
Advertisement
Next Article