ஆகம கோயில்களைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதற்கோ தடை விதிக்க கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆகம கோவில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோவில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது,
அப்போது போது ஆகம கோயில்களை கண்டறியும் குழுவில் ஜே.முருகவேல் என்பவரை நியமனம் செய்ததற்கு ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து ஜே.முருகவேல் நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ”தொடர்ச்சியாக இவ்வாறு தமிழக அரசால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்தால் ஆகம விதிகள் கோயில்களை கண்டறிந்து இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன் அர்ச்சகர் நியமனத்திலும் காலதாமதம் ஏற்படும்.
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் 46 ஆயிரம் கோயில்கள் இருப்பதாகவும், அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் அல்லாமல் 1 லட்சம் கோயில்கள் உள்ளன. மேலும் 4600 அர்சகர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பு, தமிழ்நாட்டில் ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக பொம்மபுரம் ஆதீனம் (மயிலம்) சி.சிவஞான பாலையா சுவாமிகள் பெயரை பரிந்துரைத்தது
அதை மனுதாரர்களும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவரை குழுவின் உறுப்பினராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஆகம கோயில்களைக் கண்டறிய முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி, அறநிலையத்துறை தலைவர், குன்றங்குடி அடிகளார், பொம்மபுரம் ஆதீனம் (மயிலம்) சி.சிவஞான பாலைய சுவாமிகள் ஆகிய 5 பேர் கொண்ட குழு 3 மாதத்தில் ஆகம விதிகள் மற்றும் ஆகம விதிகள் இல்லாத கோயில் ஆகியவற்றை கண்டறிந்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை 2026 ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.