மணிப்பூர் செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்... காங்கிரஸ் வரவேற்பு!
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 6 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு மார்.22 ஆம் தேதி மணிப்பூர் விரைகிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா காந்த், விக்ரம் நாத், எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களை பார்வையிடுகின்றனர்.
மேலும் மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட உதவிகளை வழங்கும் சட்ட சேவைகள் முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை திறந்து வைக்கின்றனர். மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (MASLSA) இணைந்து தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA) ஏற்கனவே நிவாரண முகாம்களில் 273 சிறப்பு சட்ட உதவி மையங்களை நிறுவியுள்ளது.
தொடர்ந்து அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் மக்களுக்கு வழங்குகின்றனர். சென்னையில் இருந்து 25 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அனைத்து நிவாரண முகாம்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த முடிவை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இருப்பினும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தராததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.
நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து 50,000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்ததற்கு வழிவகுத்த இன வெறியால் ஏற்பட்ட கலவரத்தால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் அமைதி இழந்து இருக்கும் மணிப்பூரை தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்று பார்வையிடுகின்றனர். ஆனால் மணிப்பூரை பிரதமர் மோடி சென்று இன்னும் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.