கோயில் அறங்காவலர் நியமனத்துக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவை நியமிக்கக் கோரி, இந்து தர்ம பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழநாட்டில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள 31,163 கோயில்களில் 11,982 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 4843 கோயில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு நியமன பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
மீதமுள்ள கோயில்களுக்கு பலமுறை விளம்பரம் அளித்தும் விண்ணப்பங்கள் எதுவும் வராத நிலை உள்ளதாகவும், விண்ணப்பம் வரும்பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் வேறு கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.