உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்!
இந்தியாவின் தலைமை நீதிபதியான, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவரால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார். இவரது பணிக்காலம் வரும் நவம்பர் 10ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் இன்று சந்திரசூட்டின் கடைசி பணி நாளாகும். அவரது பணி ஓய்வு 10ஆம் தேதி என்றாலும், 9 மற்றும் 10 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், இன்றே ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், “உங்களது புன்னகையை மறக்க முடியாது. பொறுமையாக வழக்குகளை விசாரணை மேற்கொண்டுள்ளீர்கள். உச்ச நீதிமன்றத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தினீர்கள். இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமளித்தீர்கள். அம்பேத்கர் சிலையை உச்ச நீதிமன்றத்தில் நிறுவியதற்கு நன்றிகள். என்றும் இளமையாக இருக்கும் உங்கள் ரகசியத்தை தெரிவிக்க வேண்டும். உடல் ரீதியாக இனி நீங்கள் உச்சநீதிமன்றத்தில் இல்லை என்றாலும், நீங்கள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளும், வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.
இனிவரும் தலைமுறையினருக்கு அது உறுதுணையாக இருக்கும்” என்றனர்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்,
“நான் இளம் வழக்கறிஞராக இருந்தபோது, நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பேன். எப்படி வாதாடுவது , நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது என பலவற்றை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன்.
உங்கள் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்யவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி ” என தனது இறுதி வேலை நாளில் பிரியாவிடை அளித்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உணவுர்பூர்வமாக பேசி விடை பெற்றார்.