“பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் மக்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தரும் கட்சிக்கே ஆதரவு!” - செல்ல.ராசாமணி
பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்து பொதுமக்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தருவதாக வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே ஆதரவு என விவசாய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் விவசாய முன்னேற்றக் கழகம், pacl முதலீட்டார்கள் மற்றும் களப்பணியாளர்களின் pacl முதலீடு பணமீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் விவசாய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விவசாய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி பேசியதாவது:
நாடு முழுவதும் 5.85 கோடி முதலீட்டாளர்களும், தமிழகத்தில் 1 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் Pacl நிதி நிறுவனத்தில் 49,100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். 2.2.2016 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் pacl நிறுவனம் முதலீடு வாங்க கூடாது என முதலீட்டை முடக்கியது. முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 6 மாத காலத்திற்குள் வட்டியுடன் பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என லோதா கமிட்டி மூலம் உத்தரவிட்டது.
8 ஆண்டுகளாகியும் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை. பணத்தை பெறமுடியாமல் 100க்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டனர். வயது முதிர்வு, நோய்வாய்ப்பட்டு பலர் பணத்தைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை மீட்க விவசாய முன்னேற்றக் கழகம் மற்றும் pacl நிதி நிறுவன முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் பலக்கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி pacl முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்கின்றோம் என தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றதோ அந்த கட்சியை ஆதரிப்போம். இல்லை ஒட்டுமொத்தமாக முதலீட்டாளர்கள் 7 கோடி பேர் மற்றும் விவசாய முன்னேற்றக் கழகத்தினர் ஆகியோர் தேர்தலை புறக்கணித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லியில் போராடிய உயிரிழந்த விவசாயிகளுக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரமும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும். வளையபட்டியில் வரவுள்ள சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய செல்ல.ராசாமணி, Pacl முதலீடு பணத்தை மீட்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.