“உங்கள் வலியை உணரமுடிகிறது!” - வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர் ஆதரவு!
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பத்தக்கம் வென்றுள்ள ஜப்பானின் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!
மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் ரே ஹிகுச்சி அமெரிக்காவின் ஸ்பென்சர் ரிச்சர்டு லீயை 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு ஏற்பட்டுள்ள இதே நிலைமை, கடந்த முறை ஒலிம்பிக்கின்போது ஜப்பானின் ரே ஹிகுச்சிக்கு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றபோது, அதில் வெறும் 50 கிராம் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக, ரே ஹிகுச்சி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வினேஷ் போகத் தனது முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ள ரே ஹிகுச்சி அறிவுறுத்தியுள்ளார். வினேஷ் போகத்துக்கு ஆதரவாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ரே ஹிகுச்சி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :
“நீங்கள் எந்த அளவுக்கு வலியை உணருகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இதேபோலத்தான். 50 கிராமுக்காக நடந்தது. இந்த நிலையில், உங்களைச் சுற்றி பேசுபவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். வாழ்க்கை ஒரு தொடர் பயணம். ‘வீழ்ச்சியிலிருந்து எழுவதே மிக அழகான விஷயம்..’ நன்றாக ஓய்வெடுங்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.