For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு... ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பா?” - தவெக தலைவர் விஜய் கேள்வி

எதிர்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு.. ஆளுக்கட்சியான பிறகு எதிர்ப்பா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
02:28 PM Jan 20, 2025 IST | Web Editor
“எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு    ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பா ”   தவெக தலைவர் விஜய் கேள்வி
Advertisement

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை ஏகனாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து, அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

Advertisement

“கிட்டதட்ட 910 நாட்களுக்கு மேல் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசியதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு என்னுடைய மனதில் ஏதோ செய்தது. அதனால், உடனே உங்கள் எல்லோருரையும் பார்த்து, பேசவேண்டும் என தோன்றியது. உங்களுடன் தொடர்ந்து நிற்பேன் என சொல்லத் தோன்றியது.

ஒவ்வொரு வீட்டுக்கும் மிகவும் முக்கியமானவர்கள் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் . அதேபோல் நாட்டுக்கு உங்களைப்போன்ற விவசாயிகள்தான் முக்கியமானவர்கள். அதனால் விவசாயிகளான உங்கள் காலடி மண்ணைத் தொட்டு கும்பிட்டுதான் என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என்று எனக்கு தோன்றியது.

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு மகனான என் கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது . நம் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கையைப் பற்றி எடுத்து சொன்னேன். அதில் ஒன்று இயற்கை வள பாதுகாப்பு. இதை நான் இங்கு சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல.

முதல் மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம் பற்றி பேசினேன். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து, சென்னை நிரந்தராமாக வெள்ளக்காடாகும் இத்திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வழியுறுத்தினேன்.

விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என சொல்லியிருந்தேன். அதை உங்கள் முன்பு இங்கு உறுதியாக வழியுறுத்துகிறேன். இந்த பிரச்னையில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். இன்னொரு முக்கியமான விஷயம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொல்ல நினைக்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை.

ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் சொல்கிறேன். இதை நான் சொல்லாவிட்டால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என கதைகட்டுவார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுடைய இருப்பையும் புவி வெப்பமயமாதல் பயமுறுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

சென்னையில் மழை வெள்ளம் வரக் காரணம் சுத்தியுள்ள சதுப்பு நிலங்களை அழித்ததுதான் என அறிவியல் ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும்போது 90% விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை அழித்து, பரந்தூர் விமான நிலையம் கொண்டு வர எடுத்த முடிவை எடுத்தது எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரச்சாகத்தான் இருக்கும்.

சமீபத்தில் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைதானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் மாதிரி பரந்தூர் மக்களும் நம் மக்கள் என்றுதானே அரசு யோசித்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்ய வில்லையே. ஏன் செய்யவில்லை என்றால் விமான நிலையத்தை தாண்டி அவர்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு லாபம் இருக்கிறது. அதை மக்களும் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் முன்வைக்கிறேன். நீங்கள் எதிர்க் கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைபாட்டைதானே இந்த பிரச்னையில் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு. ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்துகொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

விமான நிலையத்திற்காக ஆய்வு செய்யப்பட்ட நிலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டுமென மத்திய மற்றும் மாநில அரசாங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். விவசாய நிலங்கள் அல்லாத, பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களை பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு, மக்களை மிகவும் பாதிக்கும்.

மக்களுக்காக அவர்கள் வீட்டு பிள்ளையாக நானும் தவெக தொண்டர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உறுதியாக நிற்போம். ஏகானாபுரம் ஊருக்குள் இருக்கும் திடலில் மக்களை சந்திக்க நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இங்குதான் அனுமதி கொடுத்தார்கள். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று என எனக்கு தெரியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு நம் கட்சியினர் நோட்டீஸ் கொடுப்பதற்கு தடை விதித்தார்கள். அது ஏனென்றும் எனக்கு புரியவில்லை. உறுதியாக இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்”

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

Advertisement