சூப்பர் 8 சுற்று: அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா மோதின.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அண்டிரிஸ் 8 ரன்களிலும், டெய்லர் 12 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் அவுட் ஆனார். நிதிஷ் குமார் நிலைத்து ஆடி 30 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அமெரிக்கா 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்தது.
ஜோஸ் பட்லர் 83 ரன்களும், பிலிப் சால்ட் 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.