மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான கோடைக்கால சிறப்பு மலை ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தொட்ஃபங்கியுள்ளனர். அந்த வகையில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகைக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஜூலை 1ஆம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கம் துவங்கியது. மேலும் இந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன் பேரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புதிய பெட்டிகளுடன் வந்த மலை ரயிலில் 280 பேர் பயணம் மேற்கொண்டனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குன்னூரில் இதமான கால நிலை நிலவுவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.