கோடை வெயில் எதிரொலி : இளநீர் விலை ரூ.90 ஆக உயர்வு!
கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது ஒரு இளநீர் சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு, உடலினை குளிர்ச்சியாக்கவும், நீர்நடுநிலைத்தன்மையை கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.
இதனால் பழங்களின் தேவை அதிகமாகி வருகிறது. மேலும் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய, நம் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், நொங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் சராசரியாக ஒரு இளநீரின் விலை ரூ. 30 வரை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.60க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது ரூ. 90க்கு விற்பனையாகிறது.
ரூ. 20, 30 க்கு விற்பனையான இளநீர் தற்போது ரூ. 40க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.