வங்கதேச எம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பம் - வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வங்கதேச எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து இருநாட்டு போலீசாரும் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தீவிர விசாரணைக்கு பிறகு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொலையை செய்தனர் என்பதும், அவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் அசிம் அனாரின் நெருங்கிய நண்பரான அக்தருஸ்ஸாமான்தான் இந்த கொலையை செய்ய சொல்லி கூலிப்படையினருக்கு ரூ.5 கோடி கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முகமது ஷியாம் ஹூசேனை கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தினர்.
இந்நிலையில் அவர் தலையணையால் அமுக்கி மூச்சடக்கி கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றாவாளியான முகமது ஷியாமின் கூற்றுப்படி, அறையில் நுழைந்தவுடன் அன்வருல் அசீமை தலையணையால் அமுக்கி, கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் போட்டுள்ளனர் . அதனை நியூ டவுன் பகுதி மற்றும் பாக்ஜோலா கால்வாயின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர். மேலும் ஒரு சில உடல் பாகங்களை டிராலி சூட்கேஸில் எடுத்து சென்று மேற்கு வங்கத்தின் பாங்கான் எல்லைக்கு அருகிலும் வீசிவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர்.
மேலும் இந்த கொலைக்கு ஒரு பெண் உதவி செய்ததும், அவர் அக்தருஸ்ஸாமானின் காதலி எனவும் தெரிய வந்துள்ளது.