டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகள் பலர் குவிந்துள்ளனர். அப்போது ரயில்களில் ஏற பயணிகள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜ் செல்வதற்காக புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த ரயில்களின் பயணிகள் பிளாட்பாரம் எண் 12, 13 மற்றும் 14 இல் இருந்துள்ளனர்.
அப்போது பிளாட்பார்ம் 14ல் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் வந்து நின்றுள்ளது. இதில் ஏறுவதற்காக பயணிகள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மூச்சுத்திணறலால் பலர் மயக்கமடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.