கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை - ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கன்னிவாடி சார்பதிவாளர்
அலுவலகத்தில் ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, ஆடலூர், பன்றி மலை
உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுகள் செய்வது வழக்கம். இதன் காரணமாக இந்த அலுவலகத்திற்கு தினம்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1,64,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஒரு சில ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அலுவலகத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் சிலர் பத்திரப்பதிவு செய்வதற்காக அங்கு இருந்தனர். இது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெறும் எனவும், கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கன் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.