#Chennai விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு - புகை கிளம்பியதால் பரபரப்பு!
சென்னையில் நேற்று இரவு துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அரபு நாடான துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 8.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் இரவு 10 மணிக்கு, சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்லும். நேற்று இரவு வழக்கம் போல் இந்த விமானம் இரவு 8.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது.
இந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் செல்வதற்கு, 314 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் இந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில், சுத்தப்படுத்தப்பட்டு, விமானத்துக்கான ஏரிபொருள் நிரப்பும் பணிகளும் நடந்தன. அப்போது எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட திடீர் குளறுபடி காரணமாக, அளவுக்கு அதிகமாக எரிபொருள் நிரப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து விமானத்தின் எஞ்சின்கள், வெப்பப் பாதிப்பால், புகை வரத் தொடங்கியது. இதனால் பரபரப்படைந்த விமானிகள், உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர் உதவியுடன், கூடுதலாக நிரப்பப்பட்ட எரிபொருளை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து, எரிபொருள் வெளியேற்றப்பட்டது.
அதோடு விமான நிலைய ஓடுபாதையில் நின்ற தீயணைப்பு வண்டி விரைந்து செயல்பட்டு, விமானத்தில் தண்ணீரை பீச்சி அடித்து, எஞ்சினில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து வெப்பம் தணிந்து, இன்ஜினில் இருந்து வெளிவந்த புகைகளும் நின்றுவிட்டன.
இதை அடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர், மற்றும் தலைமை விமானி துணை விமானி ஆகியோர் விமானத்தை ஆய்வு செய்து விட்டு, விமானத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே விமானம் இயக்கலாம் என்று அறிவித்தனர்.
இதற்கிடையே பி.சி.ஏ. எஸ் எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அதிகாரிகள், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்பே, விமானம் மீண்டும் இயக்கப்பட வேண்டும். எனவே அதுவரையில் விமானத்தில் பயணிகள் யாரும் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்து விட்டனர். இதை அடுத்து விமானத்தில் பயணிக்க இருந்த 314 பயணிகளும், சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
அதோடு விமானப் பொறியாளர்கள் குழுவினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தை நீண்ட நேரம் துருவித் துருவி ஆய்வு செய்தனர். இப்பணிகள் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பின்பு விமானம் சென்னையில் இருந்து, துபாய்க்கு புறப்பட்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதை அடுத்து பயணிகள் 314 பேரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, இந்த விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, துபாய்க்கு புறப்பட்டு சென்றது.