பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம் - மாணவன் உயிரிழப்பு!
பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிக்கிய மாணவனை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஐந்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். அவர்களில் 4 பேரை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டனர்.
இருப்பினும், நெல்லை பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவனை மட்டும் காணவில்லை என அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி சுரேஷ் குமார் தலைமையில் தீயணைப்புத் துறையினரும், ஆயுதப்படை வீரர்களும் ஒன்றிணைந்து மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ள தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர், மாணவனை மீட்கும் முயற்சியை தீவிரப்படுத்துமாறு காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வேறு யாரேனும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவிக்கு சற்று தொலைவில் உள்ள இரட்டை கால்வாய் என்ற பகுதியில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் மாணவனை சடலமாக மீட்டுள்ளனர்.