ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் - 5 பேர் காயம்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையின் 2 வாகனங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், விமானப்படையின் 5 வீரர்கள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில், சூரன்கோட்டின் சனாய் கிராமத்தில் இருந்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சற்று நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்திய வீரர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதியில் சென்று மறைந்துகொண்ட பயங்கரவாதிகளை பிடிக்கவும், பாதுகாப்பினை பலப்படுத்தவும் அங்கே கூடுதல் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், ஷாசிதாருக்கு அருகே இந்திய விமானப்படையின் வாகனங்கள் வரிசையாக வருகை தந்தபோது தீவிரவாதிகளால் குறிவைத்து தாக்கப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் இராணுவப் பிரிவுகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் சந்தேக இடங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் கான்வாய் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.
உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஷாசிதார் அருகே உள்ள ஜெனரல் பகுதியில் உள்ள விமான தளத்திற்குள் வீரர்களின் வாகனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக்-ரஜோரி-பூஞ்ச் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான பூஞ்ச், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதில், அங்கு மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
விமானப்படை வீரர்களின் இரண்டே வாகனங்கள் அடங்கிய கான்வாய் மீதான பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு காரணமாக 5 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதாரித்த இந்திய வீரர்களின் எதிர்த்தாக்குதல் காரணமாக பயங்கவரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.