”அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தி பிடித்தவர் சுதர்ஷன் ரெட்டி”- டி.ராஜா!
இந்தியா கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பு சி.பி.ஐ கட்சியின் தலைமையகமான டெல்லி அஜோய் பவனில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் டி.ராஜா. அப்போது பேசிய அவர்,
”இந்தியா கூட்டணி சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டிக்கு முழுமையான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திரட்டுவோம். இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல இந்தியாவுடைய ஜனநாயகம், மதசார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் என்ற பல உன்னதமான அடிப்படைகளை கொண்டு இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்பாக இருந்த குடியரசு துணைத் தலைவர் "தன்கர்" ஏன் ராஜினமா செய்தார் என்பது விளக்கப்படவில்லை. தற்போது அவர் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு சூழலை உருவாக்கியது பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்திருக்கக் கூடிய மத்திய அரசு. இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை காப்பாற்றுவது. இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காப்பாற்றுவது. இந்திய நாடாளுமன்றமே செயல்படும் ஒன்றாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியின் பங்களிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதிலும், இந்தியா ஜனநாயக நாடாக தொடர்வதற்கும் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் என்பதை நம்புகிறோம்.
நீதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் சட்டத்தின் அடிப்படை நெறிகளை உயர்த்தி பிடித்தவர். அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தி பிடித்தவர். அவர் தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நல்ல வேட்பாளரை இந்திய குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.