#Sudan | தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்... இந்தியர் உட்பட 20 பேர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட்டில் அட்ராஜிக் என்ற சிறிய விமானம் எண்ணெய் வயல் விமான நிலையத்திலிருந்து ஜூபாவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே தரையில் விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான விபத்துக்கான சரியான காரணம் தெரியாத நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சுமந்து சென்ற அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்" என தெரிவித்தனர். விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.