"இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது" - பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள் : “இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்” – நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்ம பூஷன் விருது வென்ற பின் அஜித்குமார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். அனைத்து மதங்களையும், சாதிகளையும் நாம் மதிக்க வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம்"
இவ்வாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.