“இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம்” - இளையராஜா உருக்கம்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி (48) ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(மார்ச்.25) மாரடைப்பால் காலமாகியுள்ளார். இத்துயர சம்பவம் தமிழ்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் மனோஜ் பாரதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அரசியல் தலைவர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையை பொறுத்தவரை இயக்குநர் ராம், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் நேரடியா பாரதிராஜா வீட்டுக்கு சென்று துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனோஜ் பாரதி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன். இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது; ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என காலம் விதித்திருக்கிறது; மனோஜின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என உருக்கமாக கண்கலங்கியபடி பேசியுள்ளார்.