அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்...குவியும் புகார்கள்...அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!
விஸ்தாரா நிறுவனம் அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, விரிவான அறிக்கையை சமர்பிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் பல விமானங்களை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்துள்ளது. நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஸ்தாராவில் பயணிக்க டிக்கெட் புக் பண்ணியிருந்த பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து கிளம்ப வேண்டிய 15 விமானங்களும், டெல்லியிலிருந்து 12 விமானங்களும், பெங்களூரிலிருந்து 11 விமானங்களையும் விஸ்தாரா நிறுவனம் இன்று ரத்து செய்தது.
சில வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் பயணத்தை திட்டமிட்டு, முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், இப்படி திடீரென ரத்து செய்வதால், கடைசி நேரத்தில் பிற விமானங்களிலும் டிக்கெட் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் பல பயணிகள் புகார் அளித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் சிலவற்றை காண்போம்.
அதில், ராஞ்சியிலிருந்து டெல்லி செல்ல இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனது தாத்தா மரண படுக்கையில் இருக்கிறார். நான் உடனடியாக டெல்லி செல்ல வேண்டும். நிறுவனம் வேறு விமானத்தை ஏற்பாடு செய்யவும் மறுத்துவிட்டது” என குறிப்பிட்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தையும் டேக் செய்திருந்தார்.
மற்றொருவர், விஸ்தாராவை நம்பக்கூடாது என தெரிவித்திருந்தார். மற்றொருவர் நான் விமானம் மாற்றி அனுப்பப்பட்டேன். எனது உடமைகள் எதுவும் இன்னும் என்னை வந்து சேரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை சமர்பிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பயனர்களிடம் விஸ்தாரா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
“பயணிகளின் அசெளகர்யங்களைக் குறைக்க நாங்கள் மாற்று விமான தேர்வுகளையோ அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பொருந்தும் வகையில் பணத்தைத் திரும்ப அளிக்கிறோம். இந்த இடையூறுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நிலைமையை சீராக்க நாங்கள் கவனத்துடன் பணியாற்றி வருகிறோம், விரைவில் எங்கள் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவோம்” என விஸ்தாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.