சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை! புதுச்சேரியில் இருந்து அதிவேகமாக கொண்டுவரப்பட்ட நுரையீரல்!
புதுச்சேரியில் இருந்து சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் உடலுறுப்பு கொண்டுவரப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
அறச்சிந்தனையின் அடிப்படையில் 43 வயதான ஒரு பெண்மணி, தனது உறுப்புதானத்தின் வழியாக முகம் தெரியாத வேறொரு நபருக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க அரிதான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அதிலும் உறுப்பு தானமளித்த பெண்மணியின் குடும்பத்தினரது செயல் அவர்களின் தர்ம சிந்தனையும், தாராள மனதும், மனிதநேயத்தின் அழகையும் மற்றும் உறுப்புதானம் அளிப்பதனால் கிடைக்கும் பயனையும் எடுத்துரைத்துள்ளது.
இருபக்க நுரையீரல்களும் மாற்றப்பட்டிருக்கும் இந்த வெற்றிகர உறுப்புமாற்று சிகிச்சை, நுரையீரல் உறுப்புமாற்று செயல்பாட்டில் முக்கிய மைல்கல் ஆகும். புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து சென்னையின் வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனைக்கு மிக வேகமான சாலை வழி பயணத்தின் மூலம் தானமாக பெறப்பட்ட நுரையீரல்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தாம்பரம் காவல்துறை ஆணையரகம், ஆவடி காவல்துறை ஆணையரகம், சென்னை போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முயற்சிகளின் மூலம் பசுமை வழிப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக உறுப்புமாற்று சிகிச்சைக்கான இந்த நுரையீரல்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.