சென்னையில் இன்றுமுதல் கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கம்!
சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என புறநகர் ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு நவீன வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் குறித்து ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பயணிகள் இடையே தெற்கு ரயில்வே கருத்துக்கணிப்பு கேட்டது.
வாட்ஸ் அப் எண் மூலமாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு அடிப்படையில் அலுவலக வேலை நேரத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகளை இயக்குமாறு பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
குறிப்பாக அலுவல் மற்றும் கல்வி நேரம் ஏற்றார்போல் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் சேவைகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். பொது மக்களின் மற்றும் பயணிகள் கருத்துக்களை ஏற்று தெற்கு ரயில்வே பயணிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு அலுவலக வேலை நேரத்தில் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் அதற்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு அலுவல் வேலைகளில் பயணிகள் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் குறித்து இருந்த பழைய அட்டவணை
1. காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
2. காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
3. மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
4. மாலை 5.45 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
5. இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
6. காலை 5.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைக்கான அட்டவணை
1. காலை 6.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
2. காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும்.
3. காலை 9.41 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
4. மதியம் 1 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
5. மதியம் 2.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.
6. மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடையும்.
7. மாலை 6.17 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும்.
8. இரவு 8.10 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அட்டவணை இன்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு - சென்னை கோட்டை - சென்னை பூங்கா - எழும்பூர் - மாம்பலம் - கிண்டி - செண்ட் தாமஸ் மவுண்ட் - திரிசூலம் - தாம்பரம் - பெருங்களத்தூர் - கூடுவாஞ்சேரி - பொத்தேரி - சிங்கப்பெருமாள் கோயில் - பரனூர் - செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் நின்று செல்லும்.
இதில் செயல்பாட்டுக் காரணங்களால் இன்று முதல் 19 ஆம் தேதி வரை திருசூலத்தில் தற்காலிகமாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் நிற்காது எனவும், மே 20 முதல் அனைத்து ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் திருசூலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயிலுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் டிக்கெட் விலைக்கான விவரங்கள்
சென்னை கடற்கரையில் இருந்து சென்னை கோட்டை, சென்னை பூங்கா, எழும்பூர் ஆகிய இடங்களுக்கு செல்ல 35 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மாம்பலம் வரை செல்ல 40 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து கிண்டி, செண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம் ஆகிய இடங்களுக்கு செல்ல 60 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களுக்கு செல்ல 85 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாச்சேரி, பொத்தேரி ஆகிய இடங்களுக்கு செல்ல 90 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் செல்ல 100 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பரனூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு செல்ல 105 ரூபாய் என்ற அளவில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களில் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 35 ரூபாயில் இருந்து தொடங்கி அதிகப்பட்சமாக 105 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.