சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!
ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. மழை வெள்ள நீர் ரயில் தண்டவாளங்களை ஆக்கிரமித்ததால், சென்னையில் புறநகர் ரயில்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதே போல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த பிறகு நேற்று இரவு முதல் மழையின் தீவிரம் குறைந்தது. இன்று காலையில் இருந்து வெயிலும் தலை காட்டத்தொடங்கியதால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ரயில் தண்டவாளங்களில் நின்ற மழைநீர் மெள்ள வடிந்தது. இதனை அடுத்து இன்று பிற்பகலில் இருந்து சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
• 1. சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு (30 நிமிட இடைவேளை).
• 2. சென்னை கடற்கரை – திருவள்ளூர் – அரக்கோணம் (பெரம்பூர் வழியாக) (30 நிமிட இடைவேளை).
• 3. திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி (01 மணிநேர இடைவேளை).
4. வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை (30 நிமிட இடைவேளை) வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 06.12.2023 (புதன்கிழமை) அன்றும் மறுஅறிவிப்பு வரும்வரை இதே அட்டவணையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.