திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை!!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இத்திருவிழா கடந்த 13-ந்தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்கள், மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கோவில் வளாகங்களில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் 3-வது நாளான இன்று காலை யாகசாலை மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தொடரந்து, மாலை திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்தி நாதருக்கு பால், பழம், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், திருநீர் , மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகத்திற்கு பின் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடரந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கந்தசஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவில் வளாகத்தில் நியூஸ்7 தமிழ் சார்பில் பெரிய அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ்7 தமிழ் பக்தி யூ டியூப் சேனலிலும் முழுவதுமாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.