விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் - சேர்ந்தனூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணையானது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான கோரையாறு, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் பெய்து வரும் தொடர் மழை காரணத்தால், விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் - சேர்ந்தனூர் கிராமங்களை இணைக்கும் வகையில் மலட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்திற்கு மேல் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் ஆர்பரித்து செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனாங்கூர், புருஷானூர், அரசமங்கலம், தென்மங்கலம், வி.அகரம், பிள்ளையார்குப்பம், பஞ்சமாதேவி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களைச்
சேர்ந்த பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் விழுப்புரம் அல்லது பண்ருட்டி செல்ல வேண்டுமானால் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால், சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், கிராம மக்களில் சிலர் ஆபத்தை உணராமல் மூழ்கிய தரைப்பாலத்தில் சீறி பாயும் தண்ணீருக்கு இடையே கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.