விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!
நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி துவங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று அரையாண்டு விடுமுறை நீடிக்கப்படுவதாக தவறான தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என்றும், இன்று திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 2025-ஆம் ஆண்டின் முதல் ஆய்வை நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மேற்கொண்டோம். இந்தப் புத்தாண்டில் பள்ளியில் அடியெடுத்து வைத்துள்ள மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் சந்தித்து, இந்த ஆண்டு கல்வியில் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் தெரிவித்தோம். தொடர்ந்து பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.