முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்... கேரள அரசின் அறிவிப்பால் குஷியான மாணவர்கள்... காரணம் என்ன?
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், 2 வாரங்களுக்கு புத்தகங்கள் எதுவும் கொண்டுவர வேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அந்த 2 வாரங்களுக்கு சமூக பிரச்னைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்படும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வாரத்தில் போதைப்பொருள் பயன்பாடு, வன்முறை நடத்தையை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், உணர்ச்சி கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் சட்ட விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகள் குறித்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
காவல்துறை, கலால் வரி, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சமூக நீதி, தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிகாரிகளை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.