"வறுமையை வென்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி" - அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகுவின் மகள் பூமாரி. கடந்த 2023ஆம் ஆண்டு திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த பூமாரி, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்தார்.
தனது கணவர் முத்துப்பாண்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பொன்னழகு விறகு வெட்டி தனது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். இத்தகைய கடினமான சூழலிலும், பூமாரி சேலத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும், எம்.பி.பி.எஸ் மீதான ஆர்வத்தால் மீண்டும் நீட் பயிற்சி பெற்று இந்த ஆண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.
தற்போது நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு இடம் பெற்றுள்ளார் பூமாரி. வறுமையிலும் தனது விடாமுயற்சியின் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து புலிக்குறிச்சி கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவி பூமாரியின் சிறப்புமிக்க முயற்சியைப் பாராட்டும் வகையில், அவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டபோதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூமாரியின் அயராத முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது பெருமைக்குரிய செயல். நம் ஊரிலிருந்து, குறிப்பாக ஒரு கிராமப்புறத்திலிருந்து ஒரு மருத்துவர் உருவாகியிருப்பது நமக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று பாராட்டியுள்ளார்.