பாலியல் வன்கொடுமை - #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனிடையே அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் டெல்லியிருந்து நேற்று இரவு சென்னை வந்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று விசாரணையை துவங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர்கள் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக இருப்பது குறித்து ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.