For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“... உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

08:06 PM Dec 27, 2024 IST | Web Editor
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்   “காவல்துறை தரப்பில் இருந்து எப் ஐ ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“    உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் காவல்துறை தரப்பில் இருந்து கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டு இருக்கிறார்? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதேபோல மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

இரு வழக்கறிஞர்களின் முறையீட்டையும், பெண் வழக்கறிஞரின் கடிதத்தையும் ஆய்வு செய்த நீதிபதிகள், காவல்துறையினரின் புலன் விசாரணை குறித்து தீவிரமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில் இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் விளக்கத்தை பெறாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக இன்று பிற்பகல் தமிழக அரசு மற்றும் காவல் துறையினரின் விளக்கத்தைப் பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தாமாக முன்வந்து எடுக்க தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும். அதனால், வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் வெளியிடப்படவில்லை என்பதற்காக ஆதாரங்கள் உள்ளது. தற்போது, எப்.ஐ.ஆரை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத படி மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணை எடுப்பதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதற்கு முன் வழக்கு தொடர நினைப்பவர்கள் முறைப்படி வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு எண்ணிடும் பணி முடிந்ததும் விசாரணைக்கு எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

Tags :
Advertisement