பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் - உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரியார் நகரைச்
சேர்ந்தவர் இயேசு பாதம். இவர் கிறிஸ்துவ மத போதகராக இருந்து வருகிறார். இவரது மகன் எடிசன் (17). சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 படித்து வந்த எடிசன் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இந்த சூழலில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) வெளியானது. இதில், எடிசன் உயிரியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தார். இதனால் எடிசனின் பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது.
பெற்றோர் திட்டியதால் எடிசன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எடிசன் நேற்று (மே 8) மாலை வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றார். நீண்டநேரம் ஆகியும் எடிசன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில், சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள மூடப்பட்ட தனியார் கல்குவாரியில் இருசக்கர வாகனம் மற்றும் செருப்பு இருந்தது இன்று காலை கண்டறியப்பட்டது. இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு எடிசனை தேடினர். எங்கு தேடியும் எடிசன் கிடைக்காததால் கல்குவாரி நீரில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கலாம் என்று சோமங்கலம் போலீசார் சந்தேகித்தனர். உடனே போலீசார் படப்பை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கல்குவாரியில் உள்ள நீரில் எடிசனை தேடும் பணியில்
ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கல்குவாரியில் இருந்து உயிரிழந்த நிலையில் எடிசனை மீட்டனர்.
பின்னர் சோமங்கலம் போலீசார் எடிசனின் உடலை உடற்கூராய்விற்காக
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் பெற்றோர் மாணவனை கண்டித்ததால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.