"குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!
குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரேயா குப்தா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
சென்னை பூக்கடை பஜாரில் உதவி ஆணையராக இருந்த ஸ்ரேயா குப்தா நேற்று முன்தினம் (ஆக. 12) திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் இன்று (ஆக. 14) செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக உள்ளன. அதற்கு தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நானும் ஒரு பெண் என்பதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். நான் வட மாநிலத்திலிருந்து வந்திருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, நியூஸ்7 தமிழுக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அளித்த பேட்டியில், "ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நிறுத்தப்படுவார்கள். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.