‘யானைகளை தாக்கிய பாகன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - கேரள உயர்நீதிமன்றம்...
யானைகள் முகாமில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என குருவாயூர் தேவஸ்தானத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் பகுதியில் பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயிலில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது, சுவாமியை சுமந்தபடி கோயிலில் ஊர்வலமாக வருவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஏராளமான பிரபலங்கள் குருவாயூர் கோயிலுக்கு யானைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
இதையடுத்து யானைகளைத் தாக்கி துன்புறுத்திய இரண்டு யானை பாகன்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ள தேவஸ்தானம், இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக்குழு நேற்று விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். இதனிடைய ஆசிய யானைகள் அமைப்பு சார்பில் சங்கீதா என்பவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், யானைகளை தாக்கிய பாகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குருவாயூர் யானைகள் முகாமில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் தேவஸ்தானத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.